
கோவாவில் நடந்த ‘அயர்ன்மேன்’ போட்டியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை, நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று, இறுதி இலக்கை எட்டி சாதித்துள்ளார்.
கோவாவில் அயர்ன்மேன் 70.3 டிரையத்லான் பந்தயம் நடந்து வருகிறது. இது நீச்சல் (1.9 கிமீ), சைக்கிள் ஓட்டுதல் (90 கிமீ) ஓட்டப்போட்டி(21.1 கிமீ) ஆகியவற்றை உள்ளடக்கிய கடினமான சர்வேதேச விளையாட்டு நிகழ்வு.சர்வதேச வீரர்கள் உட்பட சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது இந்தப் போட்டி.
இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். இதில் அவர், 1.9 கி.மீ., தூர நீச்சல் போட்டியில் 55:20 நிமிடங்களில் கடந்தார். தொடர்ந்து 90 கி.மீ., தொலைவு சைக்கிள் போட்டியில் பந்தய தூரத்தை 3:14:33 மணி நேரத்தில் கடந்தார். 21.1 கி.மீ., தூர ஓட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து முடித்தார். மூன்று போட்டிகளையும் சேர்த்து 8 மணி நேரம் 13 நிமிடங்களை எடுத்துக் கொண்டு, இலக்கை எட்டினார் அண்ணாமலை.
இந்தப் போட்டியில் அண்ணாமலை பங்கேற்றது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணாமலை தனது சமூகத் தளப் பக்கங்களிலும் இவற்றைக் குறிப்பிட்டு, உடல் திறன் குறித்த தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
பாஜக எம்பியும், அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி செயலாளருமான தேஜஸ்வி சூர்யாவும் கோவா அயர்மேன் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்றுள்ளார். இருவரும் இணைந்து இறுதி இலக்கை எட்டி சாதித்துள்ளனர். அவர்கள் பங்கேற்ற படங்களையும் சமூகத் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படங்களைப் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ஃபிட் இண்டியா குறித்த தனது எண்ணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனது கட்சியின் இளைய உறுப்பினர்கள் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா இதில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமரின் பதிவினைப் பகிர்ந்து அண்ணாமலை அவருக்கு நன்றி தெரிவிக்கும் வ்கையில், என் அன்புக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐயா, #FitIndia இயக்கத்தின் மூலம் நமது நாட்டின் இளைஞர்களின் ஒரு தலைமுறையை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி.
உங்கள் தலைமையின் கீழ், உடற்பயிற்சி ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ளது, ஆரோக்கியமான மற்றும் வலுவான பாரதத்திற்கான பகிரப்பட்ட நோக்கத்தில் அனைத்து தரப்பு குடிமக்களையும் ஒன்றிணைக்கிறது. உங்கள் நீடித்த உத்வேகத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ஐயா, இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்திற்கு எங்கள் சிறிய பங்களிப்பை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். – என்று குறிப்பிட்டிருந்தார்.





