
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானத்தில் இருந்து சாஸ்தாகோயில் செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் திங்கட்கிழமை இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செவ்வாய்கிழமை காலை கோயில் திறக்க சென்றபோது இச்சம்பவம் நடந்தது தெரியவந்து உடன் சேத்தூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.கோவிலில் உண்டியல் மற்றும் சிலை கொள்ளையை தடுக்க முயன்றபோது இவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தேவதானம் சாஸ்தா கோயில் செல்லும் வழியில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திங்கட்கிழமை இரவு காவலர்கள் தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து(50)சங்கரபாண்டியன் (65)
இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை சிலைகளை கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என தெரிகிறது. அவர்களை கோவில் காவலர்கள் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது கொள்ளையடிக்க வந்தவர்களால் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இந்த கோவில் சேத்தூர் ஜமின் மற்றும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. வெட்டி படுகொலை செய்யப்பட்ட காவலர்கள் தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து(50)சங்கரபாண்டியன்(65)என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவிலில் உண்டியல் சேதமாகி இருப்பதால் மர்மநபர்கள் கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கோவிலில் பழமை வாய்ந்த சிலைகள் உள்ளன . இவைகள் மற்றும் நகைகள் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து மதுரை சரக டி.ஐ. ஜி., அபினவ் குமார், எஸ். பி., கண்ணன் தலைமையில் போலீஸார் முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியும் சாஸ்தா கோயில் செல்லும் சாலையில் ஆய்வு செய்தும் பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.
ராஜபாளையம் அருகே காவலர்கள் 2 பேர் கோவிலுக்குள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும் மிகப்பெரிய கோவிலை சுற்றி மிக உயரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு உள்ளே சுவாமி சிலைகள் மூலவர் சன்னதியில் உள்ளன இந்த பழமை வாய்ந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம் இக்கோவிலில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது








