
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு கார் குண்டு வெடிப்புச் சம்பவம், நாட்டின் தில்லியில் செங்கோட்டை அருகே நடைபெற்றுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் அடிக்கடி நடைபெற்ற குண்டுவெடிப்புகள், தற்போதைய பாஜக ஆட்சியில் இல்லை என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், அதை முறியடிக்கும் வகையில் தலைநகர் தில்லியில் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தில்லி செங்கோட்டை அருகே, திங்கள் அன்று மாலை 6:52க்கு, சிக்னலில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், சுற்றிலும் தீயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. சில வாகனங்கள் தீயில் நாசம் அடைந்தன. பத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதில் கொல்லப்பட்டார்கள். அருகில் இருந்த ஆறு கார்கள், இரண்டு இ – ரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோ ஆகியவை தீப்பற்றி எரிந்தன.
சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் அச்சத்துடன் அப்பகுதியில் இருந்து அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இது காரை வெடிக்கச் செய்து ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று கூறப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், சில மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முன்னதாக, ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், 2,900 கிலோ வெடிபொருட்கள் பாதுகாப்புப் படையினர் வசம் சிக்கியது. அதே நாளில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் தில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கார் சென்ற பார்க்கிங், டோல்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அந்த நபரின் கார், பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்து வெளியேறுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.
தில்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கார் கடைசியாக புல்வாமா நபருக்கு கை மாறியது. தற்போதைய உரிமையாளர் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர். பயங்கரவாதிகள் நிறைந்த புல்வாமா பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. காரின் முதல் உரிமையாளர் சல்மானுக்கு பிறகு வாங்கியவர்கள் பெயர் மாற்றம் செய்யாமல் இயக்கியது தெரிய வந்துள்ளது. சல்மானிடம் இருந்து நதீம் என்பவருக்கு கார் விற்கப்பட்ட நிலையில் அது மூன்றாவதாக காஷ்மீர் புல்வாமா பகுதிக்கு மாறியுள்ளது.
முன்னதாக, ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீலுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் துப்பாக்கி, வெடிபொருட்கள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பலிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், அதே நாளில் தில்லி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால், வெடிபொருள் பதுக்கிய கும்பலுக்கும் குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை தீவிரமடைந்தது.
இந்நிலையில், தில்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என தில்லி போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு – காஷ்மீரில் நம் பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, போஸ்டர்களை ஒட்டிய டாக்டர் அடில் அகமது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு – காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீல் கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.
இது தவிர வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரிக் வயர்கள், பேட்டரிகள், மெட்டல் ஷீட்கள், வெடிகுண்டு தயாரிப்பை விளக்கும் குறிப்பேடுகள் ஆகியவையும் சிக்கின. இந்நிலையில் நேற்று தலைநகர் தில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், 12 பேர் உயிரிழந்தனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில், பரிதாபாத்தில் இருந்து செயல்பட்டு வந்த தனது கூட்டாளிகள் போலீசாரிடம் சிக்கியதால், பயங்கரவாத அமைப்பை சேர்ந்த புல்வாமா டாக்டர் உமர் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தியது தில்லி போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாதி உமர் வீட்டில் இருந்து செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.





