
கடந்த வாரம் தென்காசியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 7பேர் பலியான நிலையில் இன்றும் தென்காசி அருகே ஏற்பட்ட விபத்தில் மூவர் பலியான நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை அருகே மேலும் ஒரு கோர விபத்தாத அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ள சம்பவம் நெஞ்சை உறையவைத்துள்ளது
சிவகங்கை அருகே இரண்டு அரசு பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து அப்பகுதியை உலுக்கியுள்ளது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் 2 ஆண்கள் என 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தென்காசி அருகே இடைகால் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 7 பயணிகள் உயிரிழந்தனர். 50 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இன்று தென்காசி அருகே மற்றொரு விபத்து ஏற்பட்டு மூவர் பலியான நிலையில் தற்போது சிவகங்கையில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் இருந்து காரைக்குடி சென்ற ஒரு அரசு பஸ்சும், காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பேருந்தும் சிவகங்கை அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிக்கிய பயணிகள் படுகாயமடைந்து அலறினர். இதையடுத்து அருகில் இருந்து வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோன்று சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிலர் அங்கு கொண்டு செல்லப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்டமாக இந்த சாலை குறுகியது என்பதாலும், இதில் பஸ்கள் அதி வேகமாக இயக்கப்பட்டால் விபத்து நேரிட வாய்ப்பு உள்ளது. தனியார் பஸ்கள் இங்கு அதிகளவு வேகத்தில் செல்வதாக பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதிவேகமாக இயக்கப்பட்டதால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக பஸ்களானது திருப்பத்தூர் செல்லும் சாலையில் அதாவது பிள்ளையார்பட்டி, குன்றத்தூர் சாலையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது எனவும் இந்த சாலை சற்று குறுகலானது என்றும் அதிகளவிலான வளைவுகள் இருப்பதனாலும் அதி வேகத்தில் பஸ்கள் இயக்கப்பட்ட விபத்து நேரிட வாய்ப்பு உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.





