
SIR – எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, பீஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றது. இதேபோல், நாடு முழுவதும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தப் பணிகளை முடித்து, திருத்தப் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் தீர்மானித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசுகள் இந்தப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, சாக்குப் போக்குச் சொல்லி, பணிகளை முடக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. காரணம் தற்போதைய பட்டியலில் உள்ளபடி தேர்தல் நடந்தால் முறைகேடுகளில் ஈடுபடலாம்; மீண்டும் ஆட்சியமைப்பதில் வாய்ப்பு ஏற்படும் என்று மாநிலங்களில் ஆளும் தரப்பு முனைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு ஏற்ப, தமிழக ஆளும் கட்சியின் அங்கமாகத் திகழும் அரசு ஊழியர் சங்கம், தங்களுக்கு வேலைப்பளு அதிகம் என்று கூறி தேர்தல் நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக அறிவித்து வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டன. அதை முன்னிட்டு, தேர்தல் பட்டியல் திருத்தப் பணிகளைச் செய்து முடிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசும் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதியுடன் அவகாசம் முடிவடையும் நிலையில் டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபம் இருந்தால் ஜனவரி 15ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். ஆட்சேபங்கள் குறித்து பிப்ரவரி 7ம் தேதிக்குள் அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும். பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கணக்கீட்டுப் படிவங்களை ‘ஆன்லைனில்’ பூர்த்தி செய்ய வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், அதற்கு, வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலிலும், ஆதார் அட்டையிலும் ஒன்றாக இருக்க வேண்டும்’ என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது…
தமிழகத்தில், 2002, 2005ம் ஆண்டு நடந்த, தீவிர திருத்தப் பணி வாக்காளர் பட்டியலில், வாக்காளர் தங்கள் விபரங்களை, https://www.voters.eci.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதன் முகப்பு பக்கத்தில், ‘Search your name in the last sir’ என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். அதில் தமிழகம் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில், ‘பெயர் மூலம் தேடுதல்’ அல்லது, வாக்காளர் அடையாள அட்டை எண் வழியே தேடுதல் என்பதன் அடிப்படையில், தங்கள் விபரங்களை மீட்டெடுக்கலாம்.
பெயர் பயன்படுத்தி தேடும்போது, மாவட்டம், சட்டசபை தொகுதி, வாக்காளர் பெயர், தந்தை, தாய், கணவர், சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரி பார்ப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து, வாக்காளர் தங்கள் விபரங்களைப் பெறலாம்.
வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை, ஆன்லைன் வழியே நிரப்ப, தேர்தல் கமிஷன் வசதி ஏற்படுத்தி தந்துள்ளது. வாக்காளர் தங்கள் மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, ஆன்லைன் வழியே உள்நுழைய வேண்டும். அப்போது, மொபைல் எண்ணுக்கு வரும், ஒரு முறை ஓ.டி.பி., எண்ணை உள்ளிட வேண்டும்.
உள்நுழைந்த பின், அந்த பக்கத்தில் காட்டப்படும், ‘ Fill Enumeration Form’ என்ற இணைப்பை தேர்வு செய்யலாம். இந்த வசதியை, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.
வெற்றிகரமாக உள் நுழைந்த பின், அதில் கோரப்படும் விபரங்களை நிரப்ப வேண்டும். சரியான விபரங்களை சமர்ப்பித்த பின், இணைய பக்கம் ‘e-sign’ பக்கத்திற்கு மாறும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட, மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை பதிவு செய்ததும், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும். – என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கெனவே பி.எல்.ஓ.க்கள் மூலம் அவரவர் தொகுதியில் இந்தத் திருத்தப் படிவங்களைக் கொடுத்திருந்தாலும், அது சமர்ப்பிக்கப்பட்டது என்பதை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.





