
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த மார்ச் 10ம் தேதி காணாமல் போனார். மறுநாள் அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இந்த விவகாரத்தில் மாணவி மாயமானதாக புகார் வந்ததும் வழக்குப் பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றவாளி, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (வயது 30) என்றும், மாணவியின் விரல் நகங்களில் இருந்த சதையின் டிஎன்ஏ மாதிரியுடன் தர்ம முனீஸ்வரனின் டிஎன்ஏ ஒத்துப் போனதாகவும் போலீசார் கூறினர்.
கைதான தர்ம முனீஸ்வரன், 2020இல் எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். அவர், காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோது வேடநத்ததில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மாணவியின் உடலைப் பெற குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் உள்ள தனது சந்தேகத்தை சமூகத் தளப் பதிவில் வெளியிட்டிருக்கிறார் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை. அவரது கேள்விகள்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.
குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.
பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin , இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.




