
திருப்பூர் அதிமுக எம்.பி சத்தியபாமாவை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப் பாளையம் கச்சேரிமேடு ஸ்ரீநகர் பகுதியில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா அவரது மகன் சத்தியவசந்துடன் வசித்து வருகிறார். சத்தியபாமாவுக்கும், அவரது கணவர் வாசுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், பல ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய பின்னணியில், அதிமுக எம்.பி சத்தியபாமாவை கடுமையாக விமர்சனம் செய்து, அவரது கணவர் வாசு சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வந்தாராம். இது அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி விவாதப் பொருளாகியுள்ளது.
இந்நிலையில், தனது மகன் சத்தியவசந்திற்கு திருமண ஏற்பாடுகளை சத்தியபாமா செய்து வந்துள்ளார். கோயம்புத்தூரில் சத்தியவசந்திற்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில், நேற்றிரவு சத்தியபாமா வீட்டிற்கு கையில் கத்தியுடன் வந்துள்ளார் அவரது கணவர் வாசு. அப்போது, சத்யபாமாவை தகாத வார்த்தைகளில் திட்டிய வாசு, ஒரு கட்டத்தில் சத்தியபாமாவை தாக்க முற்பட்டாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்த மகன் சத்தியவசந்த் மற்றும் சத்யபாமாவின் சகோதரர் சண்முகபிரபு ஆகியோர், வாசுவை தடுத்துள்ளனர். அவர்களையும் வாசு கத்தியால் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து வாசுவை மடக்கிப் பிடித்து கோபிசெட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சத்தியபாமாவின் சகோதரர் சண்முகபிரபு காவல்நிலையத்தில் வந்து, சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதை அடுத்து வாசுவின் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், வாசுவைக் கைது செய்து, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதி முன் ஆஜர்படுத்தினார். விசாரித்த நீதிபதி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் வாசு அடைக்கப்பட்டார்.
முன்னதாக, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் சத்தியபாமாவுக்கும் அவரது கணவர் வாசுவுக்கும் பல ஆண்டுகளாகவே தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டு, சத்தியபாமாவுக்கு, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருந்தார் வாசு. அதில், கோபி நகராட்சி தலைவர் ஆன பின்னர் கணவர் வாசுவை உதாசீனப்படுத்தத் தொடங்கினீர்கள். கணவர் வாசுவுக்கு தெரியாமல் பல இடங்களில் அவர் பெயரில் கடன் பெற்றுள்ளீர்கள். மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது பலரிடம் பணம் பெற்று தங்களுக்கு வாசுதான் பணம் கொடுத்துள்ளார். அதேபோல் அவரது விவசாய நிலங்களை அடமானம் வைத்து ரூ.2 கோடி பெற்றுத்தர வற்புறுத்தினீர்கள்.
மனம் போன போக்கில் வாசுவைத் தவிர்த்து 2 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் உங்களது செயல்கள் தன் நலனுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் என கணவர் வாசு கருதுகிறார். ஆகையால் 1990ல் இருவருக்கும் ஏற்பட்ட திருமணத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்வதற்கு தாங்கள் முன்வர வேண்டும்… என்று வாசு அந்த நோட்டீசில் குற்றம்சாட்டியிருந்தாராம்!
இந்தச் சம்பவம் இரு வருடங்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தன்னை ஜெயலலிதா அடித்துவிட்டார் என்று நாடாளுமன்றத்தில் அழுது புலம்பு புகார் கூறிய நேரத்தில்தான் இந்த விவாகரத்து நோட்டீஸ் விஷயமும் வெளியாகி ஜெயலலிதாவுக்கு தர்மசங்கடத்தைக் கொடுத்தது என்கிறார்கள்.



