
தாம்பரம்-கொல்லம் ரயிலுக்கு கேரள எம்.பிக்கள் தலைமையில் செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில்,தமிழக எம்.பி, எம்.எல்.ஏ, க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
சென்னை தாம்பரத்திலிருந்து – கொல்லம் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் – தென்காசி -செங்கோட்டை, புனலூர் வழியாக இயக்கப்பட்டது.
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரள மாநிலத்திற்கு பல்வேறு ரயில்கள் மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்தன.
இந்த ரயில்கள் 2010ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றிட 350 கோடி ரூபாய் செலவில் பணிகள் 8 ஆண்டு காலமாக நடைபெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த தடத்தில் ரயிலை இயக்க இரு மாநில மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் செங்கோட்டை – கொல்லம் அகல ரயில் பாதையில்
வண்டி எண்: 06027, தாம்பரம் – கொல்லம் சிறப்பு ரயில் மார்ச் 30ம் தேதி (வெள்ளி) அன்று, தாம்பரத்திலிருந்து மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 05.55க்கு செங்கோட்டை வந்தது.இந்த ரயில் கொல்லத்திற்கு காலை 10.30 மணிக்கு போய்ச் சேரும்.
வண்டி எண்: 06028, கொல்லம் – தாம்பரம் சிறப்பு ரயில் மார்ச் 31ம் தேதி (சனி) அன்று, கொல்லத்திலிருந்து மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 05.55 மணிக்கு செங்கோட்டைக்கு வரும்.
இன்று காலை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு காலை 05.55மணிக்கு வந்த ரயிலை கொல்லம், கொட்டாரக்கரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடிக்குன்னில் சுரேஷ்,பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு கொல்லம் புறப்பட்டது.
அதனை இரண்டு எம்பிக்களும் தொடங்கி வைத்தனர். பின்னர் இதே ரயிலில் இரண்டு எம்.பிக்களும் கொல்லம் நோக்கி ரயிலின் சாதாரண பெட்டியில் பயணித்தனர்.
இந்த புதிய பாதையில் புதிய ரயில் இயக்கத்தினை கேரள மாநில எம்.பிக்களை தவிர தமிழக அரசியல் கட்சியினர் எம்.எல்.ஏ,மற்றும் எம்.பிக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



