spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்நியூட்ரினோ ஆய்வினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? அணுக் கதிர்வீச்சு உண்டா? ஓர் அறிவியல் பார்வை!

நியூட்ரினோ ஆய்வினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? அணுக் கதிர்வீச்சு உண்டா? ஓர் அறிவியல் பார்வை!

theni neutrino

கே: நியூட்ரினோ என்பது என்ன?

ப: அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போல ஓர் அடிப்படைத் துகள் நியூட்ரினோ ஆகும். பல கோடி கோடி நியூட்ரினோக்கள் நொடிக்கு நொடி நம்மை சுற்றிப் பாய்ந்து ஊடுருவிச் சென்று கொண்டே உள்ளன. இவை எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை.

விண்ணிலிருந்தும் காலுக்கு அடியில் பூமியிலிருந்தும் வெளிப்படும் நியூட்ரினோ துகள்கள் கோடி கோடியாக எந்நேரமும் நம்மைச் சுற்றிப் பாய்ந்து கொண்டே உள்ளன. ஆனாலும் இந்தத் துகளை இனம் காண்பது எளிதல்ல.

இப்படி ஓர் அடிப்படைத்துகள் இருக்கிறது என்ற யூகம் தர்க்க ரீதியாக 1930களில் வெளிப்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில்தான் இந்தத் துகள் குறித்து நுணுக்கமாக ஆராய கருவிகள் படைக்க முடிந்துள்ளது.

இன்றும்கூட இந்தத் துகள் குறித்த அறிவை விட அறியாமைதான் அதிகம்.

கே: இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு என்பது என்ன?

ப: ஜப்பான், கனடா, இத்தாலி மற்றும் பூமியின் தென்துருவம் ஆகிய இடங்களில் தற்போது நியூட்ரினோ ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் நடத்தப்படும் நியூட்ரினோ ஆய்வுக்கு ஐஎன்ஓ (India based Neutrino Observatory-INO) என்று பெயரிடப் பட்டுள்ளது. நியூட்ரினோ துகளைக் குறித்த நுண் ஆய்வுதான் தேனியில் அமையவிருக்கிற இந்திய நியூட்ரினோ நோக்குக்கூடத்தின் பணி.

இரும்பின் வழியே ஊடுருவும் நியூட்ரினோக்களை சென்சார் கருவிகள் மூலம் உணர்ந்து, ஆய்வு செய்யப் போகிறர்கள். இந்தப் புதிய முறையிலான ஆய்வுக் கூடம் உலகிலேயே இந்தியாவில்தான் முதன்முதலாக அமைக்கப்படுகிறது.

கே: இதை ஏன் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்?

ப: நியூட்ரினோவை தனியாக ஆய்வு செய்ய வேண்டுமானால், அதனுடன் வேறு எந்த துகளும் உணர்விக் கருவியில் படக்கூடாது. சூரியன் மற்றும் அண்டவெளியிலிருந்து வரும் நியூட்ரினோக்கள் தனியாக வருவதில்லை.

காஸ்மிக் கதிர் போன்ற பல்வேறு துகள்கள் இணைந்து கலந்துதான் வருகின்றன. மலையைக் குடைந்து அதில் நியூட்ரினோவை உணரும் ஆய்வுக் கருவியை வைக்கும் போது, அந்த ஆய்வுக்கருவியில் நியூட்ரினோ மட்டும் வந்து விழும்.

மற்ற பொருட்களை எல்லாம் மலை வடிகட்டி விடும். காஸ்மிக் கதிர்களின் பாதிப்பு இல்லாமல் நியூட்ரினோ துகள்களை மட்டும் ஆய்வு செய்ய வேண்டுமானால், எல்லா திசைகளிலிருந்தும் குறைந்தது 1,000 மீட்டர் கற்களால் சூழப்பட்ட நிலையில், மலையின் உள்ளே அமைந்த குகைக்குள் மட்டுமே ஆய்வு நடத்த முடியும்.

கே: இதற்கு ஏன் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தேனியைத் தேர்வு செய்தார்கள்? இந்தியாவின் வேறு மலைகளை ஏன் தேர்வு செய்யவில்லை?

ப: நியூட்ரினோவை மட்டும் ஆய்வு செய்வதற்கு வேறு துகள்களை வடிகட்ட காலத்தால் மிகப்பழைய மலையாக இருக்க வேண்டும்.

இமயமலை உயரமானதுதான். ஆனால் கடினமானது அல்ல. பழைய மலைகள்தான் கடினமாக இருக்கும். இமயமலைப் பகுதி பெரும்பாலும் படிமப் பாறைகளால் ஆனது. சிறு சிறு பாறைகளால் ஆன தொகுப்பாக அந்த மலைப் பகுதி உள்ளதால், அங்குள்ள பாறைகளில் உறுதித்தன்மை மிகவும் குறைவு.

மற்ற மாநிலங்களிலும் பாறைகளின் தன்மை இந்த ஆய்வுக்கு ஏற்றதாக இல்லை. ஆனால், தேனி மாவட்டத்தின் மேற்கு போடி மலையிலுள்ள பாறைகள் மிகவும் கடினமான சார்னோக்கைட் பாறைகளால் ஆனவை.

அதுமட்டுமல்ல காடுகள் அடர்ந்த பகுதி என்றால் மரங்களை வெட்ட வேண்டிவரும். விவசாய நிலம் இருக்கும் பகுதி என்றால் விவசாய நிலத்தை கையகப்படுத்த வேண்டி வரும். அவ்வாறு விவசாய நிலமற்ற, மரங்கள் அடர்ந்து இல்லாத இடமாக தேடித் தேடித் தான் இந்த மலை இறுதிசெய்யப்பட்டது.

நேரடியாக இந்தக் கருவியால் மனிதன், விலங்கு, பறவை எதற்கும் பாதிப்பு இல்லை. விவசாயம் போன்ற பயன்பாட்டில் உள்ள நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. மரங்கள் செறிவாக உள்ள பகுதிகள் தவிர்க்கப்படவேண்டும் என கவனத்தில் கொள்ளப்பட்டது.

எனவே இறுதியில் தேனி மாவட்டத்தில் பயனற்ற தரிசுப் பகுதியாக உள்ள குறிப்பிட்ட மலைப் பகுதிதான் பொருத்தமானது எனத் தேர்வு செய்யப்பட்டது.

கே: கோலார் தங்கச்சுரங்கத்தில் நடந்த ஆய்வு குறித்து?

ப: 1970களில் கோலார் தங்கச்சுரங்கத்தில் காஸ்மிக் கதிர்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. அங்கு காஸ்மிக் கதிர்களை உணரும் கருவிதான் வைக்கப்பட்டது.

காஸ்மிக் கதிர்கள் குறித்த உலக அறிவுத் தொகுப்பில் இந்த ஆய்வுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. கோலார் தங்கச்சுரங்கம் சிதிலமடைந்து வெள்ளம் புகுந்த பின் அந்த ஆய்வுக் கூடம் மூடப்பட்டது. இன்று காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி விண்வெளியிலிருந்து செயல்படுகிறது. எனவே சுரங்கம் தேவையில்லை.

கே: நியூட்ரினோ திட்டத்தால் நீர்வளம் குறைந்து விவசாயம் பாதிக்குமா? பாசனப் பற்றாக்குறை ஏற்படுமா?

ப: இந்தத் திட்டத்திற்கு நீர் அவசியம்தான். அங்கு ஏற்படுத்தப்போகும் அலுவலர் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு நீர் தேவை.

மின்காந்தத்தை குளிர்விக்க நீர் தேவை. ஆனால் இந்தத் திட்டத்திற்கு தேவைப்படும் நீர், முன்னூறு குடும்பங்களுக்கு குடிக்க, குளிக்க, சமைக்கத் தேவையான நீரின் அளவு மட்டுமே. இன்று இருக்கும் விவசாய நீருக்கு இந்தத் திட்டத்தால் எந்த பாதிப்பும் இருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கே: வெடிபொருள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறதே?

ப: இந்த ஆய்வுக் காலம் முழுவதும் வெடிபொருள்கள் பயன்படுத்தப்போவது இல்லை. இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு மலையில் பக்கவாட்டில் சுரங்கப்பாதை அமைக்க மட்டுமே பயன்படுத்தப்படும்.

கல் குவாரிகளில் செய்வது போல வெடி வைத்து பாறைகளை வெடித்துத் தகர்ப்பது அல்ல. சுரங்கம் அமைப்பதுதான் இலக்கு. எனவே controlled explosions என்கிற முறையில் வெடிப்பு ஒரு சில நொடிகள் மட்டுமே இருக்கும். சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அதிர்வு உணர்வுகூட உணர முடியாது.

ஆகவே சுரங்கம் தோண்டுவதால் சூழல் பாதிப்பு எதுவும் இருக்காது.

கே: குகையை உருவாக்க வெடி வைப்பதால் அணைகளுக்கு பாதிப்பு உண்டா?

ப: சுரங்கம் தோண்டும்போது தினமும் இரண்டு முறை மட்டுமே வெடிபொருள் வெடிக்கப்படும். இதனால் ஏற்படும் இரைச்சல் மற்றும் அதிர்வுகள் வெளிப்பகுதியில் உணராத வகையில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடுக்கப்படும்.

இந்த அதிர்வுகளால் அணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. சென்னையிலும் தில்லியிலும் நிலத்தடி மெட்ரோ ரயிலுக்காக தினமும் சுரங்கம் தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

கே: கதிர் வீச்சு ஆபத்து இருக்கிறது என்று சொல்கிறார்களே?

ப: இது அறியாமை. உண்மையில் இங்கு எந்த உற்பத்தியும் நடக்கப் போவதில்லை. நியூட்ரினோவை பொறுத்தவரையில் கதிர்வீச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் நியூட்ரினோ என்பது ஒரு அணுத்துகள் அல்ல, அடிப்படைத்துகள்.

இது எதிர்வினையாற்றாத ஒரு அடிப்படைத்துகள். எனவே இதனால் பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் இந்த நோக்குக் கூடத்தில் இயல்பாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் நியூட்ரினோவைப் பற்றிய ஆய்வுதான் நடக்கப் போகிறது.

அந்த ஆய்வால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆய்வு நடந்தாலும் நடக்காவிட்டாலும் ட்ரில்லியன் ட்ரில்லியன் நியூட்ரினோக்கள் பூமியில் விழுந்து கொண்டுதானே இருக்கின்றன?

இன்று நேற்றல்ல, பூமி பிறந்தது முதல் இவ்வாறு நியூட்ரினோ அடைமழை பெய்த வண்ணம்தான் உள்ளது.

கே: சுரங்கம் தோண்டுவதால் வெளியேறும் கழிவுகளை அந்தப்பகுதியில் கொட்டும்போது சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாதா?

ப: சுரங்கத்துக்காக வெட்டி எடுக்கப்படும் பாறைகளில் 90 சதவீதம் முழுப் பாறைகளாகக் கிடைக்கும். அவை அதிக தரமும், மதிப்பும் மிக்க கிரானைட் பாறைகளாகும். அந்த கிரானைட் பாறைகள் முழுவதும் தமிழக அரசுக்குச் சொந்தமானது என்பதால், அவற்றை வெளிச்சந்தையில் அரசு விற்பனை செய்யும்.

இதனால் அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே தூளாகக் கிடைக்கும். இந்தத் தூளில் 20 சதவிகிதம் கட்டுமானப் பணிகளில் பயனாகும். மீதமுள்ள கழிவு மட்டுமே நான்குபக்க சுவர் எழுப்பி அதற்குள் கொட்டி வைக்கப்படும்.

எனவே, பாறைகளை உடைப்பதால் தூசு மண்டலம் ஏற்படும் என்பதற்கோ, அண்டைப் பகுதிகள் பாதிக்கப்படவோ வாய்ப்பு இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe