காவிரி விவகாரத்தில் நடிகர்கள் நாங்கள் ஒற்றுமையாக போராடுவது போல் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும் என நடிகை கஸ்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
காவிரி நீரை பெறுவதற்காக நடிகர்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புவதுபோல அரசியல் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து குரல் எழுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் நீட் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசும், தமிழக அரசும் நீட் தேர்வை அமல்படுத்தின. ஆனால் காவிரி விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மத்திய அரசு அமல்படுத்த தயங்குகிறது.
காவிரியில் நமக்குத்தான் அதிக உரிமை உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா நியமிக்கப் பட்டிருக்கிறார். கல்வி விஷயத்தில் நான் மற்றவர்களை விட வேறுபட்டு நிற்கிறேன். எந்த மாநிலத்தில் உள்ளவரும், எந்த மாநிலத்திலும் பணி புரியலாம். ஆனால் அவர் குற்றச்சாட்டுகளில் சிக்காதவரா என்பதை பார்க்க வேண்டும்.
ஐ.பி.எல். போட்டியை நடத்தக் கூடாது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ரசிகர்கள் கறுப்புச் சட்டை அணிந்து சென்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறினார்.