எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாததால், விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜகதீஷ் சந்திரா, வழக்கை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பாரதீய ஜனதாவை சேர்ந்த எஸ்.வி சேகர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பகிர்ந்த பதிவில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்தை பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக எஸ்.வி சேகருக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பத்திரிகையாளர் தரப்பு மட்டுமின்றி பல்வேறு தரப்பிலும் எஸ்.வி சேகர் கருத்துக்கு எதிராக கண்டனங்கள் குவிய தொடங்கின.
இதை தொடர்ந்து, தான் பேஸ்புக்கில் பகிர்ந்த பதிவை, சரியாக படிக்காமல் பகிர்ந்து விட்டதாகவும், தனது தவறுக்கு எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் அவர் மீது பத்திரிக்கையாளர் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தனக்கு முன் ஜாமீன் கோரி எஸ்.வி சேகர் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜகதீஷ் சந்திரா, இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.



