குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்த விசாரணையை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரணை நடைபெறவேண்டும் என்ற காரணத்தால், சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனுமதித்து, அதற்காக மாதந்தோறும் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குட்கா முதலாளிகளின் டைரியிலேயே இடம்பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் ஆகிய இருவரையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிநீக்கம் செய்து, முழுமையான, உண்மையான, விரைவான விசாரணை நடைபெற தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் வில்சன், குட்கா வழக்கில் காவல்துறை & உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பொருட்கள் கொண்டு வந்து குட்கா உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றார்.