நாளை நடைபெறவுள்ள வணிகர் தின மாநாட்டில் ஆயிரக்கணக்கான பால் முகவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்று பால்முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் அனைவரும் நாளை தங்களின் பால் விற்பனை நிலையங்களையும், விநியோக மையங்களையும் அடைத்து வணிகர் தினத்திற்கு தங்களின் தார்மீக ஆதரவை தருவார்கள். எனவே, நாளை ஒருநாள் மட்டும் “தமிழகம் முழுவதும் பரவலாக பால் தட்டுப்பாடு ஏற்படும்” சூழ்நிலை இருப்பதால் பொதுமக்கள் அனைவரும்தங்களுக்கு தேவைப்படும் பாலினை இன்றே முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது