சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் அலுவலர்கள் கெடுபிடி காட்டுவது கண்டனத்துக்கு உரியது என்றும், நாங்கள் ஆடுவது நாடகம் என்று தமிழிசை கூறுவது சரியென்றால் அவர்கள் ஆடுவதும் நாடகம்தானே என்று கேள்வி எழுப்பியுள்ளார் திருநாவுக்கரசர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் நானும் மற்ற கட்சியினரும் கலந்து கொண்டோம். அந்தக் கூட்டத்தில் காவிரி குறித்து மூன்று விதமான தீர்மானங்களை நிறைவேற்றினோம்.
உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் ஆறு வாரங்கள் கெடு முடிந்து கடைசியாக வரும் மே 14ம் தேதி கெடு வைத்துள்ளார்கள். 14ம் தேதி தீர்ப்பை பொருத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.
காவிரி விவகாரத்தில் தமுக காங்கிரஸ் நாடகம் ஆடுகிறது என்ற தமிழிசை கேள்விக்கு பதிலளித்த அவர், கர்நாடகாவில் பாஜக வெற்றியடையாது. பிரசாரத்துக்கு நேரம் முடிந்துவிட்டது. பாஜக தமிழகத்திலும் கர்நாடகத்திலும்
போராடிதான் கொண்டிருக்கிறார்கள். எனவே இங்கே அரசியல் கட்சிகள் நடத்துவது நாடகம் என்றால் பாஜக நடத்தும் போராட்டமும் நாடகம்தானா என்று கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வுக்கான மூல காரணம் திமுக காங்கிரஸ் கூட்டணிதான் என்று தம்பிதுரை கூறியதற்கு பதிலளித்த அவர், இது தவறான குற்றச்சாட்டு என்றும் நீட் ரத்து செய்யாதது மட்டுமல்லாமல் பல மாநிலங்களின் மையங்களில் மாணவர்களை தேர்வு எழுத அனுப்பியதில் மிகவும் நெருக்கடி ஏற்பட்டு, மனஉளைச்சலையும் சிரமத்தையும் உண்டாக்கி இருக்கிறது. வேறு மாநிலத்துக்கு தனது பிள்ளைகளை அழைத்து சென்று உயிரிழந்துள்ளார்கள்.
அவர்களின் பிள்ளைகளை அரசு படிக்க வைப்பதோடு மத்திய மாநில அரசும் சேர்ந்து தலா 25 லட்சம் என 50 லட்சம் அக்குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் நீட் ரத்து செய்யப்பட வேண்டும். மாணவிகள் தேர்வு எழுத நுழையும் போது அவர்கள் அலுவலர்களால் அவமானப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கக்கூடாது. இது பெற்றோர் மத்தியில் எரிச்சலையும் வேதனையும் அளித்துள்ளது. இதனை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.. என்று கூறினார் திருநாவுக்கரசர்.




