சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்துக்கு மிரட்டல் விடுத்த நபர் போலீசில் சரணடைந்துள்ளார். நேற்றிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய ஒரு நபர், அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இன்று அதிகாலை வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
அதன்பேரில் ராயப்பேட்டை போலீசார், அங்கு சோதனை நடத்தியும், வெடிகுண்டுகள் சிக்கவில்லை.
பின்னர் அதே எண்ணிலிருந்து பேசிய பெண் ஒருவர், மனநலம் பாதித்த மண்ணடி பகுதியை சேர்ந்த தனது கணவர் சாதிக் தான் இவ்வாறு பேசியதாக கூறி, மன்னிப்பு கேட்டார்.
இதனை தொடர்ந்து, போலீசார் அதே எண்ணில் தொடர்பு கொண்ட போது மிரட்டல் விடுத்த சாதிக்பாஷா, தானே நேரில் வருவதாகக் கூறி, ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்தார்.
விசாரணையில், துணை தூதரகம் முன் பொதுமக்களையும், போலீசாரையும் நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைப்பதால் மிரட்டல் விடுத்ததாக சாதிக்பாஷா கூறினார்.
நண்பருடன் மது அருந்திவிட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறிய அவரிடம், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



