உதகை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றதில் ஓடுதளம் சேதமானது. இதன் காரணமாக இன்று தொடங்கவுள்ள குதிரைப் பந்தயப் போட்டிகள் 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் என மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடுதளத்தை சீரமைப்பதில் காலத்தாமதமே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி, உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14 முதல் ஜூன் மாதம் வரை குதிரைப் பந்தயங்கள் நடைபெறும். வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என சுமார் 28 நாட்கள் இந்தப் பந்தயங்கள் நடைபெறும். குதிரைப் பந்தயங்களை எதிர்பார்த்து சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் ஆவலுடன் காத்திருப்பர்.
ஆனால் கடந்தாண்டு டிசம்பர் மாதம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது, அதற்கான சீரமைப்புப் பணிகளுக்காக மைதானம் பாழ்படுத்தப்பட்டுவிட்டது. மழையின்மை காரணமாக ஓடுதளத்தை சீரமைப்பது பெரும் ரேஸ் கிளப் நிர்வாகிகளுக்கு பெரும் சவாலாகிவிட்டது. பெரும் போராட்டத்துக்கு இடையே ஓடுதளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குதிரைப் பந்தயம் நடைபெறுவதே கேள்விக்குறியாக இருந்த சூழலில், குதிரைப் பந்தயங்கள் இன்று தொடங்கும் என்றும், மொத்தம் 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



