ரஜினிகாந்த் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசியுள்ளார் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். அரசியல் முதிர்ச்சி இல்லாமல் நதிகள் இணைப்பு குறித்து பேசியுள்ளார். மத்திய அரசு மட்டுமே இரு மாநிலங்களின் நதியை இணைக்க முடியும் என வேதாரண்யத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார் ஓ.எஸ்.மணியன். இந்தியாவில் நதிகள் இணைப்பு போன்ற திட்டத்தை நிறைவேற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்பப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் கூறியது போல தமிழக அரசியலில் எந்த வெற்றிடமும் இல்லை. பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையே 37 ஆயிரம் அடி தூரம் வெற்றிடம் உள்ளது. அதைத்தான் ரஜினி குறிப்பிட்டு இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த காலா பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், நதிகள் இணைப்பு, என் வாழ்க்கையின் ஒரே கனவு. தென்னிந்திய நதிகளை இணைத்த பின், அடுத்த நாளே, நான் கண்ணை மூடினால் சந்தோஷப்படுவேன் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



