தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் கட்ட விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு, இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமா என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் 2ஆம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கு 2009ம் ஆண்டு அனுமதி பெற்ற ஸ்டெர்லைட் நிறுவனம், கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் அனுமதியை புதுப்பித்துள்ளதாகவும், ஆனால், அனுமதி பெற்ற இடத்தில் விரிவாக்கம் செய்யாமல் தெற்கு வீரபாண்டியபுரத்தில் பணிகளைத் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்பட்டதுடன், இந்த விரிவாக்கத்தை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை சென்ற வாரம் வியாழக்கிழமை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, தீர்ப்பினை இன்று வழங்குவதாக ஒத்திவைத்தது. இதன்படி சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அந்தத் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகக் கூறப்பட்டது. மேலும் 2ஆம் கட்ட விரிவாக்கத்திற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அதுவரை இடைக்காலத் தடை நீடிக்கும் என்றும், இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் ஜூன் 13ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.




