3 மாவட்டங்களில் இணையதளத்தை முடக்குவது சர்வாதிகார செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது மோசமானது. இந்தப் போராட்டத்திற்கு மதிமுகவின் முழுமையான ஆதரவு உண்டு.
காவல்துறை, தமிழக அரசு மீது தூத்துக்குடி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தூத்துக்குடியில் போலீசாரை காப்பாற்றியவர்களையே சுட்டுக்கொன்றுள்ளனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்று வரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டு, போலீஸார் மறுத்த நிலையில், பொதுமக்கள் தடையையும் மீறி பேரணி சென்றனர்.
பேரணி சென்ற பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால், பொதுமக்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். 10000க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களைத் தடுக்க முடியாமல் போலீஸார் திணறினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பொதுமக்கள், அங்கு வாகனங்களைச் சூறையாடி தீவைத்தனர். இதனால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், 10 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.



