சினாயில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் குழந்தைகள் உள்பட 224 பேரும் உயிரிழந்ததாக எகிப்து அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன
எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு மெட்ரோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஓஎக-9268 என்ற அ-321 ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் 217 பயணிகள், 7 விமானிகள் உள்பட 224 பேருடன் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட 23 நிமிடங்களில் சினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ரேடார் தொடர்பை இழந்தது.
இதையடுத்து, விமானம் மாயமானது குறித்து நடத்தப்பட்டு வரும் முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து எகிப்து ராணுவ மீட்பு படை விமானங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதில், அந்த விமானம் சினாய் மலைப்பகுதியில் தெற்கு எல்-அரிஷ் ஹசானாவில் விழுந்து நொறுங்கி கிடந்தது அடையாளம் காணப்பட்டது.
உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு 45-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த 17 பேர் குழந்தைகள் உள்பட 224 பேரும் உயிரிழந்ததை எகிப்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளதாக எகிப்து மீட்பு படை தெரிவித்துள்ளது. விமானம் விபத்திற்குள்ளானதை எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் உறுதி செய்துள்ளார்.



