தமிழகத்தில் போராடுவோர் மீது அ.தி.மு.க. அரசு அடக்குமுறையை ஏவிவிடுகிறது என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகநூலில் தெரிவித்துள்ளார்.
முகநூலில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
டாஸ்மாக் கடையை நீக்கக்கோரி போராடிய சசிபெருமாள் மரணத்திற்கு வித்திட்ட இந்த அ.தி.மு.க. அரசு, மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அவர்களை சிறையில் அடைத்தது.
இப்போது கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று போராடுவோர் மீது அ.தி.மு.க. அரசு இப்படி அடுத்தடுத்து அடக்குமுறையை ஏவிவிடுகிறது.
அ.தி.மு.க. படை போல் காவல்துறை செயல்படுவதும், மனித உரிமைகள் இப்படி கொடுங்கரத்தால் நசுக்கப்படுவதையும் பார்த்தால் ஏதோ நெருக்கடி நிலைமை தமிழகத்தில் அமலில் இருக்கிறதோ என்று அஞ்சத்தோன்றுகிறது. கோவனின் கைதிற்கும், மதுவிலக்கு போராட்டங்களை அடக்கும் அ.தி.மு.க. அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க. அரசின் அதிகாரதுஷ்பிரயோகத்தின் முன்பு சட்டத்தின் ஆட்சியும், கருத்து சுதந்திரம் அளித்துள்ள அரசியல் சட்டமும் தலைகுனிந்து நிற்கின்றனவே என்று வேதனைப்படுகிறேன் என மு.க.ஸ்டாலின் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.



