விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டியானது, வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கான பட்டியலில் மொத்தம் 422 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஈரான், வங்கதேசம், ஜப்பான், கென்யா, கொரியா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 58 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.
மேலும் ‘எதிர்கால கபடி ஹீரோக்கள்’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 பேரும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தொடரில் கலந்து கொள்ளும் 12 அணிகளில் 9 அணிகள் ஓட்டுமொத்தமாக 21 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன. மீதம் உள்ள 3 அணிகள் தங்களது அணிக்கு தேவையான ஓட்டுமொத்த வீரர்களையும் ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளன.
ஒவ்வொரு அணியும் ஏலத்தில் குறைந்தது 18 முதல் 25 வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். இதில் 3 வீரர்கள் எதிர்கால கபடி ஹீரோக்கள்’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதேவேளையில் வெளிநாட்டு வீரர்களில் 2 முதல் 4 பேரை ஏலம் எடுக்கலாம். ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக ரூ.4 கோடி வரை செலவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாக்குர், அமித் ஹூடா, சி.அருண் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி பர்தீப் நார்வால், ஜெய்தீப், ஜவஹர் தகார், மணீஷ் குமார் ஆகியோரை அணியில் தொடர்ந்து நீடிக்கச் செய்துள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணியானது சுர்ஜித் சிங், மனீந்தர் சிங் ஆகியோரையும், பெங்களூரு புல்ஸ் அணியானது ரோஹித் குமாரையும், தபாங் டெல்லி அணியானது கே.சி.மீரஜ் ஷேக்கையும், குஜராத் பார்ச்சூன்ஜெயின்ட்ஸ் அணியானது சச்சின், சுனில் குமார், மகேந்திர கணேஷ் ராஜ்புத் ஆகியோரையும், ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியானது குல்தீப் சிங்கையும், புனேரி பல்தான் அணியானது சந்தீப் நார்வால், ராஜேஷ் மோன்தால், ஜி.பி.மோரே, கிரிஷ் எர்னாக் ஆகியோரையும், தெலுகு டைட்டன்ஸ் அணியானது நிலேஷ் சாலுங்கே, மோஹ்சனையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. யு மும்பா, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ், யு.பி.யோதா ஆகிய 3 அணிகள் எந்த வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளவில்லை.



