புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் வீரர்கள் ஏலத்தில், ஈரான் வீரர் பஸல் அட்ரசெலி அதிகபட்சமாக 1 கோடிக்கு யு மும்பா அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உலக அளவில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வரும் இந்த தொடரின் 6வது சீசன். அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது. மொத்தம் 422 வீரர்கள் இடம் பெற்ற பட்டியலில் இருந்து ஏலத்தில் எடுக்க 12 அணி நிர்வாகிகள் போட்டியிட்டனர். வெளிநாட்டு வீரர்களுக்கு நடைபெற்ற ஏலத்தில், ஈரான் வீரர் பஸல் அட்ரசெலிக்கு (26 வயது) அடிப்படை விலையாக 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அவரை ஒப்பந்தம் செய்ய ஜெய்பூர் பிங்க் பேந்தர் – யு மும்பா அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. குஜராத் பார்ச்சூன் ஜயன்ட்ஸ் அட்ரசெலியை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்த நிலையில், இறுதி ஏலத் தொகையான 1 கோடி கொடுத்து வாங்க முன்வராததால், யு மும்பா அணிக்காக அவர் ஒப்பந்தமானார். இதன் மூலமாக புரோ கபடி லீக் தொடரில் அதிகபட்ச தொகைக்கு ஒப்பந்தமான வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏலத்தில் நிதின் தோமர் 93 லட்சத்துக்கு உபி யோதாஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். மற்றொரு ஈரான் வீரர் அபோஸார் மொகஜர்மிகானியை தெலுகு டைட்டன்ஸ் 76 லட்சத்துக்கு வாங்கியது. ஏலம் இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.



