புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் உலக லெவன் அணி மோதும் காட்சி டி20 போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30க்கு தொடங்குகிறது. கடந்த ஆண்டு இர்மா மற்றும் மரியா புயல் தாக்கியதில் வெஸ்ட் இண்டீசின் 5 கிரிக்கெட் மைதானங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்த ஸ்டேடியங்களை புதுப்பிப்பதற்காக புயல் நிவாரண நிதி திரட்டும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் – உலக லெவன் அணிகள் மோதும் டி20 போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இந்த போட்டிக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கார்லோஸ் பிராத்வெயிட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் அதிரடி வீரர்கள் கிறிஸ் கேல், எவின் லூயிஸ், மார்லன் சாமுவேல்ஸ், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
உலக லெவன் அணியின் கேப்டன் இயான் மார்கன் (இங்கிலாந்து) காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஷாகித் அப்ரிடி தலைமையில் களமிறங்கும் அந்த அணியில் இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக், முகமது ஷமி விளையாட உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ்: கார்லோஸ் பிராத்வெயிட் (கேப்டன்), கிறிஸ் கேல், எவின் லூயிஸ், சாமுவேல் பத்ரீ, கெஸ்ரிக் வில்லியம்ஸ், மார்லன் சாமுவேல்ஸ், ரயாத் எம்ரிட், ஆந்த்ரே பிளெட்சர், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், ரோவ்மன் பாவெல், தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), ஆந்த்ரே ரஸ்ஸல். உலக லெவன்: ஷாகித் அப்ரிடி (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், சாம் கரன், தமிம் இக்பால், லூக் ரோங்கி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், சந்தீப் லாமிச்சேன், சோயிப் மாலிக், திசாரா பெரேரா, ரஷித் கான், மிட்செல் மெக்லநாகன், தைமல் மில்ஸ், அடில் ரஷித், முகமது ஷமி.



