நடிகர் ரஜினிகாந்தை அவமானபடுத்தும் நோக்கத்தில் யார் நீங்க? என்று கேள்வி எழுப்பவில்லை என்று அந்த இளைஞர் விளக்கம் அளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் 99 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 100-வது நாளில் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதபாமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது ஒரு இளைஞர் ரஜினியை பார்த்து இளைஞர் யார் நீங்க? என்றார். இதனை சற்றும் எதிர்ப்பாராத ரஜினிகாந்த் வார்த்தைகள் திக்கிய நிலையில், நான் ரஜினிகாந்த்… சென்னையில் இருந்து வந்திருக்கேன்.. என்றார். உடனே அந்த இளைஞர், நாங்க 100 நாட்களாக போராடிக்கிட்டிருக்கோம். அப்போ வராத நீங்க இப்ப எதுக்கு வந்தீங்க… என்று கேள்வி எழுப்பினார்.
இதனை சற்றும் எதிர்ப்பாராத ரஜினிகாந்த், அவரை இரு கைகளையும் உயர்த்தி கும்பிட்டுவிட்டு அடுத்த படுக்கையை நோக்கிச் சென்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில் மற்ற அரசியல் தலைவர்களுக்கு பதவியில் இருந்தால் தான் மதிப்பு, ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. நான் யார் நீங்க? என கேட்டதன் நோக்கம் வேறு. நான் கூற வந்ததை ஊடகங்களும் மீம் கிரியேட்டர்களும் திரித்து கூறிவிட்டனர் என்று அந்த இளைஞர் விளக்கம் அளித்துள்ளார்.



