சட்டசபை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்த நிலையில், இன்று முதல் சட்டசபையில் மீண்டும் பங்கேற்கும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 29-ஆம் தேதி முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையை புறக்கணித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி நாளை பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுதும் சிறப்பாக கொண்டாடுவது, ஜூன் 12-ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும், சட்டசபை கூட்டத்தொடரில் மீண்டும் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.



