ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் 4,750 ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் விபத்தில் சிக்கியோ அல்லது திடீர் உடல் நலக்குறைவால் உயிருக்கு போராடி தவிக்கும் அனைவரையும் முதலுதவி செய்து மருத்துவமனையில் உரிய நேரத்தில் அனுமதித்து எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி வருவது 108 ஆம்புலன்ஸ் சேவை. இந்த சேவை ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டது. மேலும் ஊழியர்களை காண்டிராக்ட் எடுத்து சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஊதிய உயர்வு ,பெண் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள், 8 மணி நேர வேலை, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இந்நிலையில் 108 சேவையை நடத்தி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனப் பிரதிநிதிகள், – தொழிற்சங்கப் பிரதிநிதிகள் – தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முடிவு எட்டப்பட்டதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்



