மலேசியாவில் நடந்துவரும் மகளிர் டி-20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.
7வது மகளிர் டி-20 ஆசியக் கோப்பை போட்டிகள் மலேசியாவில் நடக்கின்றன. இதுவரை 4 முறை ஒருதினப் போட்டித் தொடராகவும், தற்போது மூன்றாவது முறை டி-20 போட்டித் தொடராகவும் இது நடக்கிறது.
இதுவரை நடந்த 6 ஆசியக் கோப்பை போட்டியிலும் இந்தியாவே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த முறை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவை தலா 4 ஆட்டங்களில் மூன்றில் வென்று 6 புள்ளிகளுடன் உள்ளன. இதில் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்த ஆசியக் கோப்பையில் இன்று நடக்கும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி, பைனல் முன்னேறும். அதனால் இந்த ஆட்டம் கிட்டத்தட்ட அரை இறுதி ஆட்டமாகவே அமைந்துள்ளது.
மற்றொரு லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் வங்கதேசம் விளையாடுகிறது. இதில் மலேசியா வென்றால், இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் தோல்வியடையும் அணிக்கு பைனல் முன்னேறும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால், வங்கதேசம் தற்போதுள்ள பார்மில் அதற்கு சாத்தியம் இல்லை. அதனால், வங்கதேசம் பைனல் முன்னேறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வங்கதேசம் 6 புள்ளிகளுடன் உள்ளது. மலேசியா இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட வெற்றிப் பெறவில்லை.
7வது முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் இந்திய மகளிர் அணி உள்ளது. கடந்த இரண்டு முறையும் பைனல் வரை முன்னேறிய பாகிஸ்தான், இந்த முறையும் பைனல் நுழைய முயற்சிக்கும். அதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நாளைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமானதாகும்.