கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டித்தொடரில் கென்யாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி தன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆட்டத்தின் 8வது மற்றும் 29வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார்.
இதன் காரணமாக ஆட்டத்தின் முதல்பாதி முடிவில் 2-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. தொடர்ந்து 2-வது பாதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியதால், கென்யா அணியால் கோல் ஏதும் அடிக்க முடியாமல் திணறியது. ஆட்டநேர முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த இந்திய கெப்டன் சுனில் சேத்ரி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தற்போது விளையாடி வரும் வீரர்களில் சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ஒரு படி முன்னேறி உள்ளார் சுனில் சேத்ரி… அர்ஜெண்டினாவின் மெஸ்சியை சமன் செய்து 2வது இடத்திற்கு அவர் முன்னேறி உள்ளார்.



