மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கு வந்து சேர்ந்து அதன் பின்னர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் (புது ஆறு) வழியாக சென்று குறுவை சாகுபடிக்கு பாசனம் அளிக்கிறது. இதன் மூலம் இப்பகுதிகளில் உள்ள 2 லட்சத்து 6 ஆயிரத்து 267 ஏக்கர் விளை நிலங்கள் பயன் அடையும்.
ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு உரிய அளவிலான காவிரி நீர் கிடைக்காததால் ஜூன் 12(இன்று) தண்ணீர் திறக்கப்படவி்ல்லை. தற்போது மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,206 கனஅடியில் இருந்து 847 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 39.94 அடியாகவும், நீர் இருப்பு 12.05 டி.எம்.சி.யாகவும், நீர் வெளியேற்றம் 500 கனஅடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருவதால் வினாடிக்கு 847 கனஅடியாக விகிதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் 12.05 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டும் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையில் 120 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்துக்ககு நீர் திறக்க முடியும் என்பதால் குடிநீர் தேவைக்கு மட்டும் தற்போது 500 கனஅடி விகிதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறந்துவிடாததை கண்டித்து நாகை மாவட்டம் மீனம்பநல்லூரில் வறண்டு இருக்கும் பாசன வாய்க்காலில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர். தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுத்தர தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



