கடந்த வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் திருச்சி, ஸ்ரீரங்கம் நகருக்கு வந்தார். அப்போது அவருக்கு கோயில் சார்பில் மரியாதைகள் செய்யப் பட்டன. ஸ்டாலின் கோயிலுக்குள் செல்லாமல், வாசலில் இருந்தே மாலை மரியாதைகளைப் பெற்றுக் கொண்டார்.
இது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இது குறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது, ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்திற்கு சென்றுள்ளார். காலை 6.45 மணி முதல் 9 மணி வரை இருந்துள்ளார். அவர் எதற்காக சென்றார் எனத் தெரியவில்லை. ஆனால் அங்கு ரங்கநாதர் கோயில் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆண்டாளின் திரு மஞ்சளை கோயில் புரோகிதர்கள் ஸ்டாலினுக்கு இட்டுள்ளனர். நெற்றியில் இடுவதற்கு அனுமதி அளித்து விட்டு, உடனே அதனை அவர் அழித்தது சரியல்ல.
இறை நம்பிக்கை இல்லை என்றால் எதற்காக ஸ்டாலின் கோயிலுக்கு செல்ல வேண்டும்? இறைவனை அவமானப்படுத்த ஸ்டாலினுக்கு உரிமை வழங்கியது யார்? அவருக்கு இறை நம்பிக்கையில்லா விட்டால், இறை நம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்று கூறினார்.
இதனிடையே நேற்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவில் கூறியிருந்த கருத்து விமரனத்துக்கு உள்ளானது. ஸ்டாலின் குறித்து கருத்து தெரிவித்த அவர்,
கண்ணாடியை திருப்பி வைத்தால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என்ற அஜித் பட நகைச்சுவைக்கு அடுத்தப்படியாக, ஆகச் சிறந்த மூட நம்பிக்கை என்பது சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்பது தான்!
நெற்றியில் வைத்த மஞ்சள் பொட்டை அழித்து விட்டால், கோயிலுக்குள் நடத்திய சுக்கிரபுத்திரி யாகத்துக்கு பலன் கிடைக்குமா… கிடைக்காதா? பகுத்தறிவுவாதிகள் பதில் சொன்னால் பரவாயில்லை!
– என்று கிண்டல் செய்துள்ளார்.




