அடிச்ச சதம்… சும்மா அதிருதுல்ல…! ராகுலுக்கு ரசிகரான தோனி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி, சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ராகுலின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தோனி ரசிகராகிவிட்டார். ராகுலின் கொண்டாட்டமும் தோனி அதற்குக் காட்டிய ரசிப்பும் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துடன் இந்திய அணி டி20 போட்டிகள் மூன்றிலும், 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடுகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 159 ரன் எடுத்து, 160 ரன் என்ற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. இந்த ரன்களை மிக எளிதாக அடித்து, இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் ராகுல் அடித்த இரண்டாவது சதம் இது.

சதம் அடித்ததும் ராகுல் தனது மகிழ்ச்சியை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார். இதை மேலே கேலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தோனி, ராகுலின் கொண்டாட்டத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் எழுந்து வந்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து கொண்டு வைரலாக்கி வருகின்றனர்.