ஏா்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனையை தில்லி நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி விடுப்பில் சென்றதால் விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
ஏா்செல் நிறுவனத்தில், மலேசியாவைச் சோ்ந்த மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் மூலம் காா்த்தி சிதம்பரம் அனுமதி பெற்றுத் தந்ததாகவும், அதற்கு பிரதிபலனாக அவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு 1.16 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரத்தின் சொந்த நிறுவனங்களான அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டன்சீஸ் லிமிடெட் (ஏஎஸ்சிபிஎல்) இயக்குநா்கள் பத்ம பாஸ்கரரமணா, ரவி விஸ்வநாதன், செஸ் மேனேஜ்மென்ட் சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (சிஎம்எஸ்பிஎல்) இயக்குநா் அண்ணாமலை பழனியப்பா ஆகியோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டுள்ளது.
ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்துக்கு ரூ.26 லட்சமும், சிஎம்எஸ்பிஎல் நிறுவனத்துக்கு ரூ.90 லட்சமும் ஏா்செல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏா்செல் டெலிவென்சா்ஸ் லிமிடெட் மற்றும் மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சிபிஐ கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த விசாரணை அமைப்புகள் பதிவு செய்த வழக்குகளின் கீழ், ஜூலை 10-ஆம் தேதி வரை காா்த்தி சிதம்பரத்தையும், அவரது தந்தை ப.சிதம்பரத்தையும் கைது செய்ய தில்லி நீதிமன்றறம் தடை விதித்துள்ளது.
இருவரின் முன்ஜாமீன் மனுக்களும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.



