பட்டாசுக்கு தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன்மூலம் 5 லட்சம் பேர் நேரிடையாகவும், 3 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுள் நாடு முழுவதிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மத்திய அரசு பட்டாசு தொழிலை ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் சேர்த்து 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்தது. இதனால், பட்டாசு விலை உயர்ந்து, வடமாநில வியாபாரிகள் ஆர்டர் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த வரியை குறைக்கக்கோரி பட்டாசு ஆலை உரிமையார்கள் போராட்டம் நடத்தியதால், 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. அதன்பின் பட்டாசு உற்பத்தி பணி ஓரளவுக்கு சீரடைந்தது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுக்கு பட்டாசு காரணம் என, மேற்குவங்கத்தை சேர்ந்த 2 சிறுவர்கள், இந்தியா முழுவதிலும் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கக்கோரியும், மத்திய அரசு பட்டாசுக்கு தடை விதிப்பதை தடுக்க கோரியும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த டிசம்பர் 26 முதல் ஜனவரி 22 வரை ஆலைகளை மூடி போராட்டம் நடத்தினர். ரூ400 கோடி வரை வர்த்தகம் பாதித்தது. பட்டாசு தொழில் காக்கப்படும் என மாநில அரசு உறுதியளித்ததால் மீண்டும் ஆலைகள் திறக்கப்பட்டன. எனினும் உச்சநீதிமன்ற வழக்கால் போதிய ஆர்டர் இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் பட்டாசு தொழிலாளர்களுக்கு இந்தாண்டு கூலிஉயர்வு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், பட்டாசுக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.



