மானாமதுரை பகுதியில் மணல் குவாரிகள் அமைக்கும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இன்று மானாமதுரையில் முழுக் கடையடைப்பு போராட்டம் நடத்த, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தில் வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை ஆகிய வைகையாற்றுப் பகுதிகளில் அரசு சார்பில் மணல் குவாரிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மானாமதுரை பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் ஒன்றுதிரண்டு, குடிநீர்த் திட்டங்களை பாதிக்கும் குவாரிகளை அமைப்பதற்கு எதிரிப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், மானாமதுரை பகுதியில் முதல்கட்டமாக தெ.புதுக்கோட்டை கிராமத்தில் வைகையாற்றுக்குள் இம்மாத இறுதிக்குள் மணல் குவாரியை அமைத்து, மணல் விற்பனையை தொடங்க அரசு நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அடுத்தடுத்து, செய்களத்தூர், வாகுடி ஆகிய இடங்களிலும் குவாரிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, அடுத்தக் கட்ட போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்ய மானாமதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகி ஏ.ஆர்.பி. முருகேசன் தலைமை வகித்தார்.
இதில், மானாமதுரை பகுதியில் மணல் குவாரிகள் அமைக்கும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், உடனே குவாரிகள் அமைக்கும் நடவடிக்கையை நிறுத்திவிட்டு குடிநீர்த் திட்டங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும், மானாமதுரையில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தவும், தெ.புதுக்கோட்டை கிராமத்தில் குவாரி அமைத்தால் அதற்குச் செல்லும் வாகனங்களுக்கான வழியில் மரங்களை வெட்டிப்போட்டு அடைத்து போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



