8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடைபயணம்

01 31 July Commisnistஅரசின் சாதனை என்ற பெயரில் அமைச்சர்கள் சைக்கிள் பேரணிக்கு அனுமதி தரும் காவல்துறை, எட்டுவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை சந்திக்க அனுமதி மறுப்பதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன்  வெளியிடடுள்ள அறிக்கையில், “சமீப காலமாக தமிழக காவல்துறை மக்கள் பிரச்சனைகளின் மீது நடத்தப்படும் எந்தவிதமான போராட்டத்திற்கும், இயக்கங்களுக்கும் அனுமதியளிப்பது இல்லை. அதிலும் குறிப்பாக இயக்கங்களுக்கு அனுமதி கோருவோர் நீதிமன்றங்களை நாடி நிவாரணம் பெறுவதை தடுக்கும் பொருட்டு இயக்கம் நடத்துவதற்கு முந்தைய நாளில் ‘அனுமதி மறுக்கப்பட்டது’ என்ற கடிதம் தருவதை காவல்துறை தனது வழக்கமாக கொண்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக யாரும் போராட முடியாது என்கிற நிலையில் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி தடுப்பதும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெற வேண்டியதிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த நிலையில் விவசாயிகளை நிர்ப்பந்தித்தும், துன்புறுத்தியும், பயமுறுத்தியும் எட்டு வழிச் சுங்கச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடக் கோரி திருவண்ணாமலையிலிருந்து – சேலம் வரை ஆகஸ்ட் 1 முதல் நடைபயணம் செல்ல அனுமதி கேட்டு, ஜூலை 23-ந் தேதியே காவல்துறை கூடுதல் இயக்குநருக்கும், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், காவல்துறை ஜூலை 29-ம் தேதியன்று சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி அனுமதி மறுத்து கடிதம் வழங்கியுள்ளது. அரசு மக்களை நிர்ப்பந்திக்கிறது, மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைபயணம் செல்கிறது, இதில் சட்டம் – ஒழுங்கு கெடுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

மேலும் காவல்துறை சட்டத்திற்கு உட்பட்டு விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடைபயணம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்த பின்னரும், இவ்வாறு அனுமதி மறுப்பது காவல்துறையின் எதேச்சதிகார போக்கை காட்டுவதாகும்.

அரசியல் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை தட்டிப்பறிக்கும் இப்போக்கினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஆனால், அதேசமயம் ஆளுங்கட்சியின் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும், அனுமதிக்கப்படாத இடங்களிலும், வழித்தடங்களிலும் கூட கூட்டங்கள், சைக்கிள் பயணங்கள் அனுமதியளிப்பதை காவல்துறை வழக்கமாக கொண்டுள்ளது.

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியும், எதிர்க்கட்சிகளுக்கு மற்றும் அமைப்புகளுக்கு ஒரு நீதியையும் காவல்துறை கடைபிடிப்பது பாரபட்சமான போக்காகும். காவல்துறையின் இத்தகைய அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல என்பதாலும், விவசாயிகளின் கோரிக்கை நியாயம் என்பதாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டபடி இன்று  இந்த நடைபயணத்தை தொடருவது என்று முடிவு செய்திருக்கிறது.

காவல்துறையும், தமிழக அரசும் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக, மக்கள் நல இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கிற கொள்கைகளை கைவிட வேண்டுமெனவும், இந்த நடைபயணத்தை அனுமதிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.

மக்கள் உரிமைகளுக்காக அடக்குமுறைகளை கடந்து நடைபெறும் இப்பேரியக்கத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.” என்றார்.