விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிபூர திருவிழா தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆடிப்பூரம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும். இதை முன்னிட்டு ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னார் உற்சவர்களை தேருக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு பெண்களின் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.





