மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு அருகே உருவாகி வரும் கருணாநிதியின் 8 அடி உயர சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைப்பதற்காக, மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியில் கருணாநிதியின் 8 அடி உயர சிலை செய்யும் பணி நடந்து வருகிறது.
சிற்பிகள் தீனதயாளன், கார்த்திக் ஆகியோர் இந்த சிலையை வடிவமைத்து வருகிறார்கள். தற்போது சிலையின் மாடல்களில் மண்ணால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கருணாநிதி சிலையை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புதுப்பேடு வந்தார். அவர் கருணாநிதியின் உருவ சிலையை ஆர்வமுடன் பார்த்தார். அப்போது முகத்தின் நாடி பகுதியில் சிறிய வளைவு இருக்குமாறு வடிவமைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். அதன்படி வெண்கல சிலை விரைவில் வடிவமைக்கப்பட உள்ளது.
கருணாநிதி சிலையை வடிவமைக்கும் சிற்பி ஏற்கனவே அண்ணா சிலை, காமராஜர் சிலை, கண்ணகி சிலை, முரசொலி மாறன் சிலை, சிங்கார வேலர் சிலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து பெயர் பெற்றவர். இப்போது கருணாநிதியின் சிலையையும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
இந்த சிலை செய்து முடித்ததும் விரைவில் அண்ணா அறிவாலயத்தின் முன்புற பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் வைக்கப்படும் என தெரிகிறது.



