சென்னை: ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு, ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
வரும் 20ஆம் தேதி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. அதற்கு மேடை, பந்தல் அமைக்கப்படவுள்ள இடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. அதனாலேயே அமைச்சரவை தீர்மானம் உடனடியாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதை ஏற்க முடியாது. கலால் வரியை 50 சதவீதம் மத்திய அரசு குறைக்க வேண்டும். மத்திய அரசு வரிவருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு கொடுப்பதாக, மத்திய அமைச்சர் கூறியது தவறு. தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை இன்னும் மத்திய அரசு தரவில்லை என்றார்.




