சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாவதால் வட தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து ஆழ்ந்த காற்ழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளது.
இதனால் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று மாலை 45 முதல் 55 கிமீ., வேகத்திலும் நாளை 65 முதல் 75 கிமீ., வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
இதனால் மீனவர்கள் அந்தமான் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு, இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஆந்திரா மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அடுத்த இரு தினங்களுக்கு வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில முறை மிதமான மழை பெய்யும் என்று கூறினார்.




