கன்யாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜலந்தர் பேராயர் பிராங்கோ முல்லக்கல், கொச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த பிஷப் பிராங்கோ தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்யாஸ்திரி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை அவர் மீது கூறினார். மேலும், அவர் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறினார். தொடர்ந்து பணம் கொடுத்து சமரசம் பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இது குறித்த புகாரினை ஒரு கட்டத்தில் கேரள காவல் துறை ஏற்று, பிராங்கோ மீது வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
இதனிடையே, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, பிஷப் பிராங்கோ, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 25ஆம் தேதி நடைபெறும் என்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பிஷப் பிராங்கோ இன்று ஆஜரானார். வைக்கம் பகுதி துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப் படுகிறது.




