சென்னை: நடிகை நிலானி சென்னை மதுரவாயலில் உள்ள தமது வீட்டில் வைத்து, கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசையில் உள்ளார்.
சினிமா உதவி இயக்குனர் காந்தி லலித் குமாருடன் நெருங்கிப் பழகிய நிலானி, திடீரென அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி தொல்லை கொடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால் போலீஸார் இருவரையும் அழைத்து காவல் நிலையத்தில் விசாரித்துள்ளனர். தொடர்ந்து, நிலானியை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறிச் சென்ற காந்தி லலித்குமார், மீண்டும் அவரை மிரட்டியதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி கே.கே.நகரில் நடு சாலையில் காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதை அடுத்து, காந்தி லலித் குமார் தற்கொலைக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலானி விளக்கம் அளித்தார்.
மேலும், லலித் குமாருடன் தாம் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சிலர் திட்டமிட்டே பரப்பி வருவது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக நிலானி கூறினார். இந்நிலையில் மதுரவாயலில் உள்ள தனது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதாக நிலானி தெரிவித்திருந்தார். இதை அடுத்து செய்தியாளர்கள் அவரைச் சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றனர்.
ஆனால், நிலானியின் குழந்தைகள் வந்து, தனது தாய் விஷம் குடித்து விட்டதாக அழுதுள்ளனர். தகவலறிந்து அருகில் வசிப்போர், நிலானியை மீட்டு கே.கே. நகர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.
அப்போது நிலானி, கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது. நிலானிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.






