சென்னை: தமிழக முதலமைச்சர், காவல் துறை அதிகாரியை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், சர்ச்சைக்குரிய வகையில் முதல்வர், காவல் துறை அதிகாரி ஆகியோரை அவதூறாகப்பேசியதாக, அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை அன்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அந்த இயக்கத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், முதலமைச்சர் என்னைக் கண்டாலே பயப்படுகிறார், நான் அடித்துவிடுவேனோ என்று பயந்துபோய் தள்ளிச் செல்கிறார் என்று பேசினார். மேலும், சென்னையில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்து அவதூறாகப் பேசினார். கருணாஸின் சர்ச்சைக்குரிய பேச்சு, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
மேலும், சாதி மோதலைத் தூண்டும் வகையில், வன்னியர், தேவர், ஜான் பாண்டியன் என்றெல்லாம் சினிமா வசனத்தைப் பேசுவது போல் பொது இடத்தில் மேடையில் பேசினார். அவரது பேச்சு கலவரத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும், எனவே கருணாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினார், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்.
மேலும், கருணாஸின் பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. கருணாசின் பேச்சுக்கான விளைவுகளை அவர் சந்தித்தே ஆக வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தன் அமைப்பு இளைஞர்களை சரக்கு அடி, கொலை செய், வன்முறையில் இறங்கு என்று சாதி உணர்வுகளைத் தூண்டி விடும் வகையில் பேசியதுடன், அவர் சார்ந்த சாதி அமைப்புக்கு சம்பந்தமே இல்லாத திருமுருகன் காந்தி, ராஜீவ் கொலையாளிகள் ஆகியோருக்கு ஆதரவாகவும் பேசி, அதிர்ச்சியை ஏற்படுத்தினார் கருணாஸ்.
இந்நிலையில், இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குதல், சாதி-மத-இன மோதலை தூண்டுவது, கொலை மிரட்டல், கூட்டுச் சதி, அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




