சுகாதாரத் துறை அமைச்சருடன் வாக்கு வாதம் செய்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம்

 

சுகாதாரத் துறை அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யபட்டுள்ளார்

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஃபதேதாபாத் மாவட்டத்தில் நேற்று பொதுமக்கள் குறைத் தீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், ஃபதேதாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்தக்கூட்டத்தின்போது, ஃபதேதாபாத்தில் உள்ள கிராமத்தில் போதைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவது குறித்து காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியாவிடம் அமைச்சர் அனில் விஜ் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மாவட் காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியா, அந்தச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த 10 மாதங்களில் மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றதில் பொறுமை இழந்த சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியாவை ஒருமையில் கூறியுள்ளார்.இருந்த போதிலும் அங்கிருந்து வெளியேற சங்கீத் மறுத்துவிட்டார்.

அவர் மீது இருந்து கோபத்துடன் அமைச்சர் அனில் விஜ் அந்தக் கூட்டத்தை விடுத்து வெளியேறினார்.

அமைச்சர்- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடையே நடைபெற்ற வாக்குவாதம், “வாட்ஸ் அப்’ மூலம் கைப்பேசிகளில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. பெண் அதிகாரியிடம் கண்ணியக்குறைவாக நடந்ததற்காக சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ்ஜுக்கு பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கண்டனம் தொடந்ர்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஃபதேதாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியா, அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்படுவதாக ஹரியாணா மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், சங்கீத் காலியா எந்தப் பொறுப்புக்கு எங்கு மாற்றப்பட்டுள்ளார் எனும் விவரத்தை சுற்றறிக்கையில்
கூறவில்லை .