மதுரை ஆதீனமாக நித்யானந்தா தொடரலாம் என்றும், நித்யானந்தா நியமிக்கப்பட்ட விவகாரத்தில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
மதுரை: மதுரை ஆதின மடத்தின் 293வது ஆதீனமாக நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டதற்கு தடைவிதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது ஆதீனமாக நித்யானந்தா கடந்த 2012ஆம் ஆண்டு ஆதினகர்த்தர் அருணகிரிநாதரால் நியமனம் செய்யப் பட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நித்யானந்தா நியமனம் செய்யப் பட்டதற்கு தடை விதித்தது.
ஆனால் இதற்கு எதிராக நித்யானந்தா தாக்கல் செய்யப் பட்ட மனு கடந்த 2014ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நித்யானந்தா தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் இன்று தனதுஉத்தரவைப் பிறப்பித்தார்.
மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர அறநிலையத்துறைச் சட்டப்படி, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என நீதிபதி கூறினார். ஆனால், வழக்கு தொடர்ந்தவர்கள் அவ்வாறு அனுமதி பெறவில்லை. எனவே, நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.





