சென்னை: சென்னையில் இன்று மாலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள், சினிமா, அரசியல் வாழ்க்கை என பல தகவல்களையும் எடுத்துச் சொல்லும் விதமாக தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கடந்த ஒரு வருடமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இந்த விழா கொண்டாப்பட்டது.
மதுரையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற இந்த அரசு விழாக்களின் நிறைவு விழாவாக இன்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த விழா நடக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த விழாவுடன் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழாவும் நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்ற அவைத்தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும் விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்து, எம்ஜிஆர்., பொன்மொழித் தொகுப்பை வெளியிடுகிறார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில், எம்ஜிஆரின் உருவப்படம் திறந்து வைக்கப்படுகிறது. விழாவில் கலந்து கொள்ள ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. ஆனால், மரியாதை கிடைக்காது என்ற காரணம் கூறி, ஸ்டாலின் இதில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்து விட்டார்.




