தமிழக அரசே ! வெள்ள நிவாரணம் எங்கே?  நாங்க செத்துக்கிட்டு இருக்கோம் : கடலூர் மக்கள் போராட்டம்

 
 
கடலூர் மாவட்ட பொது மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் தங்களுக்கு நிவாரணம் தமிழக அரசு வழங்கவில்லையென கூறி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
 
சென்னை வெள்ளதால் மிதக்கிறது மிதக்கிறது என்கிறீர்களே எங்களின் நிலைமை அதை விட மோசமாக உள்ளது என்று கடலூர் மாவட்ட மக்கள் அலறிக் குமுறி கொண்டிருக்கின்றனர்.
 
கனமழையால் கடலூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் அளிப்பவர்களால் பாதிக்கப்பட்ட மக்களை அடைய முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
 
இந்நிலையில் பண்ருட்டி அருகே இருக்கும் பேர்பெரியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம் கிராமங்களைச் சேர்ந்த 1,500 பேர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கொட்டும் மழையில் நனைந்தபடி போராட்டம் நடத்தினர்.
 
போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு வந்து மக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
 
அதே போல் பரங்கிப்பேட்டை அருகே இருக்கும் பூண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கடலூர் சிதம்பரம் சாலையில்
போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.ஆடுர், ஆடுர்அகரம் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களையும் காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துவிட்டனர்.