வெள்ள நிவாரணப் பணிகளில் அதிமுக அரசியல் ஆதாயம் தேடும் பிழைப்பு தேவைதானா?’ : விஜயகாந்த் !

 
 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைவெள்ள நிவாரணப் பணிகளில் அதிமுகவினர் அரசியல் ஆதாயம் தேடும் பிழைப்பு தேவைதானா?’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளார்.
 
மேலும் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
அரசியல் ஆதாயமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக அரசு உண்மையாக உதவவேண்டும்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின்கோரதாண்டவத்தால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகிவெள்ளக்காடாக மிதக்கின்ற நிலையில், தற்போதைய முக்கிய தேவை மழைநீரை வடியச்செய்வதும், செய்வதறியாது திகைத்து நிற்கின்ற பொதுமக்களுக்கு குடிநீர், உணவு, உடை வழங்கவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.
 
தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் நிவாரண பணிகளை தங்களால் முடிந்த அளவிற்கு செய்துவருகிறார்கள்.
 
ஆனால் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இன்றி, பல்வேறு கெடுபிடிகள் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதற்குகூட வழியில்லாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
 
நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினரோ, தொண்டு நிறுவனமோ யாரும் தங்களுடைய அடையாளங்களை வெளிப்படுத்தி கொள்ளவில்லை. மனிதாபிமான அடிப்படையில் அனைத்தையும் செய்துவருகிறார்கள்.
 
ஆனால் வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் நான் வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு வரும்போது, அதிமுகவை சேர்ந்தவர்கள் கும்பலாக நின்றுகொண்டு சென்னை மாநகராட்சியின் ஜெ.சி.பி. இயந்திரம், டிப்பர் மற்றும் குப்பை அள்ளும் லாரிகளை வைத்துக்கொண்டு, ஜெயலலிதாவின் படத்துடன்கூடிய பேனர்,அதிமுக கட்சிக்கொடியுடன் அப்பகுதியில் நிவாரண பணிகளை மேற்கொள்வதுபோல் பாவலா காட்டிக்கொண்டு, ஊடகங்களை வரவழைத்து காட்சிப்பதிவை செய்துகொண்டிருந்தார்கள்.
 
அதிமுகவினரின் பாணியில் சொல்லவேண்டும் என்றால் வெள்ள நிவாரண பணியில் அரசியல் ஆதாயம் தேடி, சீன் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இப்படி ஒரு பிழைப்பு தேவைதானா?
 
தலைமை செயலகத்திலிருந்து தமிழக அரசின் பல்வேறு துறை செயலாளர்கள் இன்று தொலைக்காட்சியில் அதிமுக அரசை காப்பாற்றும் விதமாக பல்வேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு அரசு துறையின் செயலாளர்கள், ஒரே சமயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாபெரும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் கூறும்போது சென்னை மியாட் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்ற 17 பேர் பல்வேறு காரணங்களால் இறந்துபோனார்கள் என கூறியுள்ளார்.
 
மின்சாரம் துண்டிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் செலுத்தமுடியாமல் அனைவரும் இறந்துள்ளார்கள் என அவர்களின் உறவினர்கள்பகிரங்கமாக குற்றம்சாட்டும்போது, “முழு பூசணியை, இலைச்சோற்றில் மறைக்கப்பார்த்து” தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை காப்பாற்றுவதற்காக சுகாரத்துறை செயலாளர் இதுபோன்ற தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கிறார். பொறுப்புள்ள அதிகாரியான
அவரே இதுபோன்று கூறலாமா? அவர் மட்டுமல்ல பிற அரசுத்துறை செயலாளர்களும், தமிழக முதலமைச்சர் ஜெயலிதாவிற்கு ஜால்ரா அடிக்கும் விதமாகவே பேட்டியளித்தனர்.
 
இதையெல்லாம் தமிழக மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. இதுநாள் வரையிலும் தமிழகமுதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை தவிர வேறு யாரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கருத்து கூறியதில்லை. ஆனால் மக்களின் கோபத்திற்கு அதிமுக அரசு ஆளாகியுள்ள இந்த நேரத்தில், அமைச்சர்கள் அருகில் அமர்ந்துகொண்டு துறையின் செயலாளர்களை பேட்டியளிக்க சொல்லியிருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் என்ன? எல்லாவற்றிற்கும் நான், நான் என உரிமை கொண்டாடி பதிலளிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், பிற அமைச்சர்களும், அவர்களே பதில் கூறியிருக்கலாம் அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் இதைப்பார்த்த பிறகாவது புரிந்துகொள்ளுங்கள்.
 
பிரச்னை என்று வரும்போது அதிகாரிகள் மீது பழியை சுமத்தும், அதிமுகவின் போக்கை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதிமுகவினர் நிவாரணப்பணி செய்வதுபோன்று சீன்போடுவதை நிறுத்திவிட்டு, அரசியல் ஆதாயம் தேடாமல், மனிதாபிமானத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும்.
 
சென்னை மேயரையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பார்த்து மக்கள் கேட்கும் ஒரே கேள்வி, உங்கள் ஆறுதல் எங்களுக்கு தேவை இல்லை, ஜெயலலிதா அவர்கள் ஹெலிகாப்டரில் இருந்து பார்ப்பதால் எங்கள் பிரச்னை தீர்ந்துவிடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உணவு கொடுங்கள், தேவையானஉதவிகளை செய்யுங்கள் என்றுதான் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள். இதற்கு மாறாகநேரடியாக சென்று உதவுவதுபோல், அதிமுகவினர் பேனர்கள் மற்றும் நோட்டீஸ்கள் மூலம்
விளம்பரப்படுத்துவது, பாதிக்கப்பட்ட மக்களின் வயிற்று எரிச்சலை இன்னும் அதிகமாக்குமேதவிர, எந்த விதத்திலும் உதவாது. இதை கருத்தில் கொண்டு அதிமுக அரசு நடவடிக்கை
எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளார்.

 

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.