ஜெயலலிதா படத்தை ஒட்டி விளம்பரம் தேவடுது மிகவும் மட்டமான அரசியல் : ராமதாஸ்

 
 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைவெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி விளம்பரம் தேட முயல்வது மிகவும் மட்டமான அரசியல் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்
 
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
 
சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான இராதாகிருஷ்ணன் நகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்ற அமைச்சர்களை விரட்டியடித்து பொதுமக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் பெயரளவுக்குக் கூட மேற்கொள்ளப்படாதது தான் இதற்குக் காரணம் ஆகும்.
 
வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அலட்சியம் காட்டும் அரசும், ஆளுங்கட்சியும் விளம்பரம் தேடுவதில் மட்டும் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பில் உணவு, குடிநீர், பால், பாய், போர்வை போன்றவை வழங்கப்படவில்லை. தொண்டு நிறுவனங்கள்தான் இவற்றை வழங்கி வருகின்றன. ஆனால், ஆளுங்கட்சியினரோ இதிலும் விளம்பரம் தேடும் நோக்குடன் அனைத்து பொருட்கள் மீதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.
 
உதவிப் பொருட்களுடன் சென்னைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் மாநகர எல்லையில் தடுத்து நிறுத்தும் ஆளுங்கட்சியினர், உதவிப் பொருட்கள் மீது ஜெயலலிதாவின் உருவப்படங்களை ஒட்டி அனுப்புகின்றனர். ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்படாத உணவுப் பொட்டலங்களை பொதுமக்களுக்கு வினியோகிக்க ஆளுங்கட்சியினர் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான உணவுப் பொட்டலங்கள் குப்பையில் கொட்டப்பட்டன. குறிப்பாக ஜெயலலிதாவின் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மற்ற கட்சிகளின் சார்பில் உதவி வழங்க அனுமதிக்கப்படவில்லை.
 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு துப்பில்லாத அரசும், ஆளுங்கட்சியினரும் மற்றவர்கள் வழங்கும் உதவிப் பொருட்கள் மீதும் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி விளம்பரம் தேட முயல்வது மிகவும் மட்டமான அரசியல் ஆகும். மனிதநேயமுள்ள எந்த அரசும் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ளாது. இனியாவது இத்தகைய போக்கை கைவிட்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு சார்பில் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்குவதுடன், மற்றவர்களும் உதவி செய்ய அனுமதிக்க வேண்டும்.
 
வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ளூர் பேரூந்துகள் மட்டும் இலவசமாக இயக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக தொலைதூர பேரூந்துகளும் இலவசமாக இயக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக நிவாரணப் பணிகளுக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை குறைந்தபட்சம் அடுத்த இரு வாரங்களுக்கு மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்
Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.