சென்னை: எம்.எல்.ஏ., கருணாஸுக்கு எவர் துணை போனாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படுவது உறுதி என்று கூறீனார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கருணாசுக்கு துணை போவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
அமைச்சர்கள் மீது திமுக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும், சிலைக் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளில் பொன்.மாணிக்கவேல் நல்ல முறையில் செயல்படுவதாகவும் பாராட்டு தெரிவித்தார் ஓபிஎஸ். மேலும், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பாக வேதாந்தா நிறுவனத்துடன் மத்திய அரசு உடன்பாடு செய்து கொண்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ்., இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்தாலும், அதை முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
தீவிரவாதம் குறித்த தகவலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஓபிஎஸ்., தமிழகத்தில் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் நடமாட்டம் முற்றிலும் ஒடுக்கப்பட்டு விட்டதாகக் கூறினார்.




